திருநாவுக்கரசர் திருமறைக்காடு தலத்தில் தங்கியிருந்தபோது, இத்தலத்திற்கு வருமாறு இறைவன் அழைத்ததாக தலபுராணம் கூறுகிறது.
மூலவர் 'வாய்மூர்நாதர்' அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'பாலினும் நன்மொழியம்மை' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள்.
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் அமர்ந்து காட்சி அளிப்பது வேறு தலங்களில் காண முடியாத அரிய தரிசனமாகும். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நடராஜப் பெருமான், மகாலட்சுமி, நால்வர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
இக்கோயில் சப்தவிடங்க தலங்களுள் நீல விடங்கத் தலம். இங்குள்ள தியாகராஜர் சன்னதி விசேஷம். இவரது நடனம் 'கமல நடனம்' என்று வழங்கப்படுகிறது. முசுகுந்த சக்கரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர், திருமறைக்காடு, திருக்காறாயில், திருக்குவளை, திருநள்ளாறு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். மரகத லிங்கம் உள்ளது.
முசுகுந்த சக்கரவர்த்தி, சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம். பங்குனி மாதம் 12, 13 ஆகிய இரு நாட்களில் சூரியனின் கதிர்கள் சுவாமி மேல் விழுவதைக் காணலாம். இக்கோயிலில் அஷ்ட பைரவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது 7 பைரவர்களே உள்ளனர்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|